தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து


மங்களமேடு அருகே தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

தர்பூசணி

திருச்சி மாவட்டம் இருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 28). இவர் சென்னை மரக்காணம் பகுதியில் இருந்து 2½ டன் எடை கொண்ட தர்பூசணி பழங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊரான இருங்களூருக்கு ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அடுத்துள்ள வல்லபுறம் பிரிவு ரோடு தண்ணீர் பந்தல் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சென்றபோது சரக்கு வாகனத்தின் பின்புறம் உள்ள இடது பக்கம் டயர் வெடித்தது.

இதில் சிவராஜின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக சென்று சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில் தர்பூசணி பழங்கள் அனைத்தும் உடைந்து சாலையில் கொட்டி வீணானது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் வராததால் வேறு விபத்து ஏதும் ஏற்படவில்லை. மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவராஜ் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தர்பூசணி பழங்களை அப்புறப்படுத்தி சாலையை சரி செய்து சரக்கு வாகனத்தை கிரேன் உதவியுடன் தூக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story