துணை கலெக்டர், சார்பதிவாளர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
வாணியம்பாடியில் போலி வாரிசு சான்றிதழ்கள் வழங்கி, உரிய விசாரணை செய்யாமல் பட்டா பெயர் மாற்றம் செய்ததாக துணை கலெக்டர், சார்பதிவாளர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் போலி வாரிசு சான்றிதழ்கள் வழங்கி, உரிய விசாரணை செய்யாமல் பட்டா பெயர் மாற்றம் செய்ததாக துணை கலெக்டர், சார்பதிவாளர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேறு பெண்ணுடன் பழக்கம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெரியகுரும்பதெரு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பவானி சங்கர். இவரது மனைவி கமலா (வயது 70). பவானி சங்கர் 16.6.2013 அன்று இறந்துவிட்டார்.
பாவனி சங்கருக்கு, நாராயணபுரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும், பேபி என்ற மகளும் இருந்துள்ளனர். இது கமலாவிற்கு தெரியாமல் இருந்துள்ளது.
போலி வாரிசு சான்றிதழ்
இந்த நிலையில் பாவனி சங்கர் இறந்ததையடுத்து இந்திராணி, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர், சின்னகுரும்பதெரு பகுதியை சேர்ந்த காந்தி என்பவருடன் சேர்ந்து போலியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
அப்போது வாணியம்பாடி தாசில்தாராக பணியாற்றிய கீதா ராணி, துணை தாசில்தார் ரகு ராமகிருஷ்ணன் ஆகியோர் போலி வாரிசு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
அதன் மூலம், பாவனி சங்கருக்கு சொந்தமான சின்ன குரும்பதெரு பகுதியில் உள்ள 2.35 சென்ட் நிலத்திற்கு அவர்கள் பட்டா பெற்றது தெரியவந்துள்ளது.
கோர்ட்டில் வழக்கு
இதனை தொடர்ந்து மூதாட்டி கமலாவின் உறவினர்கள், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் போலி வாரிசு சான்றிதழ் வழங்கிய தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் கார்த்திகேயன் ஆகியோர் மீது வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. அதைத்தொடர்ந்து இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
13 பேர் மீது வழக்குப்பதிவு
விசாரணையில் வருவாய்துறையினர் எந்தவிதமான கோப்புகளையும் பராமரிக்காமல், வாரிசு சான்றிதழ் சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொள்ளாமல், மூதாட்டி கமலா உயிருடன் இருப்பதை மறைத்து போலி வாரிசு சான்றிதழ் வழங்கி, அதன் மூலம் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலி வாரிசு சான்றிதழ் வழங்கியது, அதன் மூலம் பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக தாசில்தார் கீதா ராணி (தற்போது மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்), துணை தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், சார்பதிவாளர் கார்த்திகேயன், (தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்), போலி வாரிசு சான்றிதழ் பெற்ற இந்திராணி, இவரது மகன் பாலாஜி, மகள் பேபி மற்றும் காந்தி, மோதிலால் நேரு, ராம்கி, ஞானம், சிவலிங்கம், கோவிந்தராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 13 பேர் மீது வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.