இரட்டைக்கொலை சம்பவத்தை முறையாக விசாரிக்காத உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு
இரட்டைக்கொலை சம்பவ விசாரணையில் உதவி போலீஸ் கமிஷனர் பல தவறுகளை செய்திருக்கிறார் என மதுரை ஐகோர்ட்டு கண்டித்தது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை குன்னத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் சகோதரர் கிருஷ்ணராஜ். குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் அவரையும், முனியசாமி என்பவரையும் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுசம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவிடும் நோக்கத்தில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செந்தில்குமார் கைது செய்யப்படாதது ஏன்? என கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதற்கிடையே செந்தில்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி முருகலட்சுமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். எனவே இந்த வழக்கில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
ரவுடி வரிச்சியூர் செல்வம்
அதன்பேரில் ஐ.ஜி. அஸ்ராகார்க் தாக்கல் செய்த அறிக்கையில், குன்னத்தூர் இரட்டைக் கொலை வழக்கை தற்போதைய செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார்தான் விசாரித்தார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த செந்தில்குமார், கடந்த 2021-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடைய ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார், என்று தெரிவித்து இருந்தார்.
விசாரணையில் பல தவறுகள்
இந்தநிலையில், பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் பல தவறுகளை செய்துள்ளார். ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தபோது முறையாக விசாரணை நடத்தாமல் கீழ்கோர்ட்டில் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகள் பதிவு இன்னும் தொடங்கவில்லை.
குற்றப்பத்திரிகை ரத்து
கிருஷ்ணராஜ், முனியசாமி கொலை வழக்கில் கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை தென் மண்டல ஐ.ஜி. அமைக்க வேண்டும். அந்தக்குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.
உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதன்பேரில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.