கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்


கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது- மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது

மதுரை


மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த பொன்.கார்த்திகேயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒத்தக்கடை கோதண்டராமசாமி கோவிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் இங்குள்ள போலீஸ் நிலையம் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வக்கீல் கமிஷனராக சிவகுமாரை நியமித்தது. அவர் அங்கு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கோவில் நிலத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்றன என தெரிவித்து இருந்தார். அதை பதிவு செய்த ஐகோர்ட்டு, இதற்கு காரணமான ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்கு கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க குழு அமைத்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வக்கீல் விஜயகுமாரி நடராஜனை நியமிப்பதாக உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story