மதுரை அருகே பெண்ணை தாக்கியதாக வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது


மதுரை அருகே பெண்ணை தாக்கியதாக வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது
x
தினத்தந்தி 14 Oct 2023 1:45 AM IST (Updated: 14 Oct 2023 1:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே முன்விரோத தகராறில், பெண்ணை தாக்கியதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது செய்யப்பட்டார்.

மதுரை

கருவனூர் கிராமம்

மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டில் சமயநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், பொன்னம்பலம் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பொன்னம்பலம் வீடு தாக்கப்பட்டதாகவும், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைக்கப்பட்டதாகவும் பொன்னம்பலம் தரப்பினர் புகார் அளித்தனர். இதேபோல எதிர்தரப்பினரை தாக்கியதாக பொன்னம்பலம் தரப்பினர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் உள்ளிட்டோரையும், எதிர்த்தரப்பில் தி.மு.க. நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வந்த நிலையில், கடந்த மாதம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டதாக பொன்னம்பலம் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் எதிர்தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் 22 பேரும் அங்கு இல்லாதது தெரியவந்ததால் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை. இதனால் இருதரப்பினரிடையேயும் முன்விரோதம் தொடர்ந்து வந்தது.

எம்.எல்.ஏ. மகன்

இந்தநிலையில், கருவனூரைச் சேர்ந்த முத்துகருப்பாயி (வயது 65), என்பவர் அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பொன்னம்பலத்தின் மகன் தில்லையம்பலம், முன்விரோதம் காரணமாக, முத்துகருப்பாயியை அவதூறாகப்பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.. மேலும் அவரது மகளின் வீட்டு கதவையும் உடைத்துள்ளார். இதில் காயமடைந்த முத்துக்கருப்பாயி அளித்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் தில்லையம்பலத்தை கைது செய்தனர்.

இதற்கிடையே, பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் அளித்த புகாரில், தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததை தட்டிக்கேட்டதால் தான் தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், ஜெகன், முத்தீஸ்வரன், கருப்பு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story