ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என வழக்கு: சிறுபான்மை பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி


ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என வழக்கு:  சிறுபான்மை பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்ற வழக்கில் சிறுபான்மை பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது

மதுரை


மதுரை கூடல்புதூரை சேர்ந்த ஜெபஸ்டின் சூசைராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஆதி கிறிஸ்தவ கூட்டமைப்பு என்ற அமைப்பானது, பல்வேறு தலித் கிறிஸ்தவ அமைப்புகளை உள்ளடக்கியது. இந்த அமைப்புகள் ஏழை, எளிய மாணவர்களுக்காக உதவிகளை செய்து வருகின்றன. கிறிஸ்தவ திருச்சபைகள் சார்ந்த சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏழை மாணவர்களுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

ஆனால் மதுரை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது சிறுபான்மை அல்லாதவர்களிடம் நன்கொடைகளை அதிக அளவில் பெற்றுக் கொண்டு அவர்களின் பிள்ளைகளுக்கு சீட் வழங்கப்படுகிறது. இதனால் சிறுபான்மை மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல்கள் மாதவகோவிந்தன், தேவராஜ் மகேஷ் ஆகியோர் ஆஜராகி, அரசாணையின்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்காததால், சிறுபான்மை பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினர். பின்னர் நீதிபதிகள், அரசாணையின்படி, சிறுபான்மை பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா? என அரசு தரப்பு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் இது குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story