குளத்தில் மண் எடுப்பதை தடுக்கக்கோரி வழக்கு:மனுதாரர் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குளத்தில் மண் எடுப்பதை தடுக்கக்கோரிய வழக்கில் உண்மை தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் தரப்பினர் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குளத்தில் மண் எடுப்பதை தடுக்கக்கோரிய வழக்கில் உண்மை தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் தரப்பினர் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குளத்தில் மண் எடுக்க அனுமதி
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் அரிய மன்னார்குளம் உள்ளது. இந்த நீர்நிலை மூலமாக இந்த பகுதியில் உள்ள 320 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குளத்தின் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்குகளும் இந்த குளத்தை பயன்படுத்துகின்றன. திடீரென இந்த குளத்தில் வணிக ரீதியாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயத்துக்கு தேவையான வண்டல் மண் மற்றும் கரம்பை மண் எடுக்க முடியாத நிலை ஏற்படும். விவசாயப் பணிகளும் பாதிக்கும். இந்த பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நடந்து வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் பாதிக்கும். இந்த குளத்தில் இருந்து மண் எடுப்பதற்காக கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி அரிய மன்னார்குளத்தில் வணிக ரீதியாக மண் எடுக்க தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
ரூ.1 லட்சம் டெபாசிட்
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீர்நிலைகளை தூர்வாரும் நோக்கத்தில் மண் அள்ள அனுமதிக்கப்படுகிறது. மண்ணை வெட்டி எடுத்தால்தான் ஆழப்படுத்த முடியும். ஆனால் சிலர் தவறான உள்நோக்கத்துடன் பொதுநல வழக்கு தாக்கல் செய்கின்றனர். அதுபோல இந்த மனுவில் உள்நோக்கம் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மனுதாரர் மீதான உண்மை தன்மையை நிரூபித்திட மனுதாரர் ரூ.1 லட்சத்தை மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். விசாரணை முடிவில் சாதகமான உத்தரவு கிடைத்தால் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும்.
இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.