கோவையை சேர்ந்த பலரிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி- இளம்பெண் மீது வழக்கு


கோவையை சேர்ந்த பலரிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி- இளம்பெண் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:30 AM IST (Updated: 19 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்த பலரிடம் அதிக வட்டி வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்


கோவையை சேர்ந்த பலரிடம் அதிக வட்டி வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிக வட்டி

மக்கள் விழிப்புணர்வாக இருந்தாலும் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து விட்டது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதற்கு ஏற்ப கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடிக்கும் மேல் பணம் பெற்று மோசடி சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரேணுபிரியா (வயது 24). இவர் அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் எனக்கு தெரிந்த நபர் ஒருவர் திருப்பூரில் இருக்கிறார். அவர் மிகப்பெரிய அளவில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் பணம் கொடுத்தால் கூடுதலாக வட்டி கொடுப்பார். உங்கள் பணத்துக்கு நான் பாதுகாப்பு என்று பேசி உள்ளார்.

வட்டி கொடுக்கவில்லை

இதை நம்பி கோவை நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சூர்யபிரகாஷ் (32) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்து உள்ளனர். இவர்களுக்கு ஆரம்ப காலத்தில் வட்டியை கொடுத்த ரேணுபிரியா பின்னர் நாட்கள் செல்ல செல்ல, 2 மாதத்துக்கு ஒருமுறை, 3 மாதத்துக்கு ஒருமுறை என்று வட்டி கொடுத்து உள்ளார். பின்னர் நாளடைவில் பல மாதங்களாக வட்டியும் அவர் கொடுக்கவில்லை. அசலையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் ரேணுபிரியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அதை எடுத்து அவர் பேசுவதும் இல்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், ரேணுபிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து எனக்கு வட்டி வேண்டாம், நாங்கள் கொடுத்த அசலையாவது கொடுங்கள் என்று கேட்டு உள்ளனர்.

ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி

அதையும் அவர் கொடுக்காமல் காலம் கடத்தி வந்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சூர்யபிரகாஷ் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரேணுபிரியா மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, கோவையை சேர்ந்த பலரிடம் ரூ.3 கோடிக்கும் மேல் பணத்தை பெற்ற ரேணுபிரியா, அந்த பணத்தை யாரிடம் கொடுத்தார்? திருப்பூரை சேர்ந்த அந்த நிதிநிறுவன அதிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.


Next Story