விபத்தில் முந்திரி வியாபாரி பலி
பண்ருட்டி அருகே விபத்தில் முந்திரி வியாபாரி பலியானார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் சிவசங்கரன்(வயது 63). முந்திரி வியாபாரி. இவர் வேலை சம்பந்தமாக சம்பவத்தன்று சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை அரசு பஸ்சில் நெய்வேலி வந்தார். பின்னர் அங்கிருந்து தனது மொபட்டில், வீட்டிற்கு புறப்பட்டார். பண்ருட்டி அடுத்த சொரத்தூர் ஏரிக்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் மொபட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.