ஆணாக மாறிய பெண்ணுக்கு திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆணாக மாறிய பெண்ணுக்கு திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா(வயது 22). திருநம்பியான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பிறப்பால் பெண்ணாக பிறந்தேன். 15 வயது என் உடலில் ஆணுக்குரிய சில மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து திருநம்பி ஆனேன். மாறா என்ற பெயரும் வைத்துக் கொண்டேன். என்னை என் குடும்பத்தார் முதலில் ஏற்காவிட்டாலும், பின்னர் படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். எனக்கு ஒரு அக்கா உள்ளார். நாங்கள் இருவரும்தான் என் பெற்றோருக்கு வாரிசு.
இந்தநிலையில், என் தந்தை கடந்த ஆண்டு சாலை விபத்தில் பலியாகி விட்டார். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை தொடர்வதற்காக திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்தோம். அதில் என்னை திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் கேட்டோம். அதற்குரிய ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்தேன். ஆனால், அவ்வாறு சான்றிதழ் வழங்க தாசில்தார் மறுத்து விட்டார். எனவே, திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் யு.அனுநிதா ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரை திருநம்பி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.