பெண்கள் குளித்ததை படம் பிடித்தவர் மீதான வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை


பெண்கள் குளித்ததை படம் பிடித்தவர் மீதான வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை
x

பெண்கள் குளித்ததை படம் பிடித்தவர் மீதான வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பரக்கத்துல்லா (வயது 47). இவர் சமீபத்தில் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த பெண்கள் குளிக்கும்போது செல்போனில் படம் பிடித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அவர் மீது கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதுசம்பந்தமாக அவரை எனது மகன் தட்டிக்கேட்டதற்காக அவனை மிரட்டி தாக்கினார். பரக்கத்துல்லா மீது வழக்கு பதிவு செய்து, நீண்டநாள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுவிட்டது. அதை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என கோரினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, மனுவை முடித்துவைத்தார்.


Related Tags :
Next Story