ஒரே மரத்தில் தூக்குப்போட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


ஒரே மரத்தில் தூக்குப்போட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2023 7:00 PM GMT (Updated: 2 March 2023 7:00 PM GMT)

தேனி அருகே, ஒரே மரத்தில் தூக்குப்போட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்தனர்.

தேனி

கள்ளக்காதல்

தேனி அருகே உள்ள அய்யனார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (வயது 46). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி லிங்கேஸ்வரி. இந்த தம்பதிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிங்கேஸ்வரி மார்பக புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

தேனி அய்யனார்புரம் அருகே உள்ள அம்மச்சியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. அவருடைய மனைவி அமரஜோதி (39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு அமரஜோதி குடும்பத்துடன் அய்யனார்புரத்தில் குடியேறினார். அப்போது அவருக்கும், மகுடேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது, கள்ளக்காதலாக மாறியது.

நூற்பாலையில் வேலை

இதன் காரணமாக அமரஜோதிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு, அமரஜோதியும், மகுடேஸ்வரனும் 7 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஏற்கனவே உறவினர்களாக இருந்த அவர்களுக்கு இடையே உறவுமுறை தவறிய பழக்கம் மற்ற உறவினர்களுக்கும் தெரியவந்தது.

இதையடுத்து அமரஜோதி தனது குழந்தைகளுடன் மீண்டும் அம்மச்சியாபுரத்தில் குடியேறினார். அங்கு இருந்தபடி அவர் தேனியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்ற நிலையில் இரவு வீடு திரும்பவில்லை.

ஒரே மரத்தில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை அய்யனார்புரத்தில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையோரம் ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில் அமரஜோதியும், மகுடேஸ்வரனும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து, இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். அங்கு மின்சார வயரால் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்த நிலையிலும், குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையிலும் அவர்கள் வாழ்வை வெறுத்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வேலைக்கு சென்று திரும்பிய அமரஜோதியும், மகுடேஸ்வரனும் வீட்டுக்கு செல்லாமல் இரவிலேயே தோட்டத்துக்கு சென்று தற்கொலை செய்திருக்கலாம்' என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story