கேரளாவை போல் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்
கேரள வனத்துறை அமைத்து உள்ளது போல் சோலையார் அணை மளுக்கப்பாறை பிரிவில் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
கேரள வனத்துறை அமைத்து உள்ளது போல் சோலையார் அணை மளுக்கப்பாறை பிரிவில் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழக- கேரள எல்லை
தமிழக - கேரள எல்லையில் வால்பாறை சோலையார் அணை மளுக்கப்பாறை பகுதியில் தமிழக வனத்துறைக்கும், கேரள வனத் துறையினருக்கும் சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோத னைச் சாவடிகள் வழியாக செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் தனியார், சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த 2 சோதனை சாவடிகளிலும் அந்தந்த மாநில வனத்துறை யினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் அந்த சோதனைச் சாவடிகள் அடிப்படை வசதி இன்றி இருந்ததால் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.
நவீன சோதனைச்சாவடி
இந்த நிலையில் கேரள வனத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.75 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது. அது கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் இடம், பணிபுரியும் வனப் பணியாளர்கள் தங்கும் அறை, சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டம் மூலம் சுற்றுலா பயணி களுக்கு தேன், மிளகு உள்ளிட்ட வனப் பகுதியில் கிடைக்கும் பொருட்கள் வாங்க விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு கேரள வனப் பகுதியில் இருக்கும் அரிய வகை வனவிலங்குகள், பறவைகள், மரம், செடி மற்றும் வனத்தின் தன்மையை விளக்கும் வகையில் ஒரு வன தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதோடு சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், இலவச நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த சோதனைச்சாவடியே பிரமாண்ட மாளிகைபோல் காட்சி அளிக்கிறது.
சிறிய அறை
ஆனால் தமிழக எல்லையில் வால்பாறை சோலையாறு அணை மளுக்கப்பாறை பிரிவில் இருக்கும் தமிழக வனத் துறையின் சோதனைச்சாவடி உள்ளது. அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
அங்கு பணிபுரியும் வனப் பணியாளர்களுக்கு ஒரு சிறிய அறை மட்டுமே உள்ளது.
சிறிய அளவிலான கட்டிடத்தில் சோதனைச்சாவடி செயல்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கும் எந்தவித வசதிகளும் இல்லை.
எனவே கேரளா வனத்துறையினர் கட்டி உள்ளது போன்று தமிழக வனத்துறை சார்பில் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி கட்ட வேண்டும். அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
அப்போது தான் வனத்துறையினர் பாதுகாப்பாக பணியாற்ற வாய்ப்பு ஏற்படும்.
மேலும் அங்கு வனம் குறித்த தகவல்களை அடங்கிய மையத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.