விதவிதமான செஸ் பலகைகள், வெண்கலத்தால் ஆன செஸ் காய்களை சேகரித்து வைத்திருக்கும் சதுரங்க ஆர்வலர்...!
விதவிதமான செஸ் பலகைகள்,செஸ் காய்களை சதுரங்க ஆர்வலர் ஒருவர் சேமித்து வைத்துள்ளார்.
திருப்போரூர்,
திருப்போரூர் காந்தி தெருவை சேர்ந்தவர் தி.கா. சரவணன் சதுரங்க ஆர்வலர். இவர் விதவிதமான வடிவமைப்பு, வகை வகையான வடிவங்கள் உடைய சுமார் 30-க்கும் மேற்பட்ட செஸ் பலகைகளை சேகரித்து வைத்துள்ளார். இவரிடம் மரம், கண்ணாடி, வெண்கலம், மார்பில் கற்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள செஸ் பலகைகள் மற்றும் காய்களை சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வருகிறார்.
கிராமப்புற இளைஞர்களுடன் விளையாடி அதனை கற்றுக்கொடுத்து வரும் சதுரங்க ஆர்வலரான இவர் தொழில்முறை விளையாட்டு வீரர் அல்ல. இது பற்றி அவர் கூறும் போது,
தனக்கு 17 வயதில் எனது தந்தை எனக்கு செஸ் விளையாடுவது பற்றி கற்றுக் கொடுத்தார். அதற்குப் பிறகு ராமலிங்கம் என்பவர் இதில் முறைப்படி விளையாட எனக்கு கற்றுக் கொடுத்தார். அப்பொழுது செஸ் பலகையில் பல்வேறு வகையான வடிவமைப்புகளை கொண்ட செஸ் பலகைகள், காய்களை சேகரிக்க ஆர்வம் தூண்டப்பட்டு பயணம் மேற்கொள்ளும் பல்வேறு இடங்களில் இதனை தேடி விதவிதமான வகை செஸ் பலகைகள் மற்றும் காய்களை சேகரித்து வைத்துள்ளேன்.
மேலும், கோப்பை வடிவிலான செஸ் காய்கள், கண்ணாடியிலான செஸ் காய்கள், வெண்கலத்தான செஸ் காய்கள், ஆதி பழங்குடியினர்களால் கைவினைப் பொருட்களில் சேகரித்த வடிவம் இல்லாத செஸ் காய்கள் என பல்வேறு வகையான செஸ் பலகைகள் மற்றும் காய்களை சேகரித்து வைத்துள்ளேன். தனது வாழ்நாள் முழுவதும் எங்கெங்கு பயணிக்கின்றோனோ அங்கு கிடைக்கும் விதவிதமான செஸ் காய்கள்,பலகைகளை சேகரித்து வருவேன் என கூறினார்.