நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி குழந்தை பலி


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி குழந்தை பலி
x

நாட்டறம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரு வயது குழந்தை பலியானது. கணவன்- மனைவி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரு வயது குழந்தை பலியானது. கணவன்- மனைவி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

லாரி மீது கார் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் சக்கரவர்த்தி (வயது 35). இவரது மனைவி தேவி (30). இவர்களது குழந்தைகள் ராகவசரண் (4), ஜெய்சரண் (1) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான காரில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் நடைபெறும் உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர் காரை சக்கரவர்த்தி ஓட்டிச் சென்றார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் ஊருக்கு திரும்பினர். பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி -வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே வந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.

குழந்தை பலி

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு வயது குழந்தை ஜெய்சரண் பரிதாபமாக உயிரிழந்தான். தேவி மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story