சிவகங்கை அருகே கல்லூரி வேன் மோதி மரம் சாய்ந்தது; மாணவிகள் உள்பட 20 பேர் காயம்
சிவகங்கை அருகே கல்லூரி வேன் பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 18 மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை அருகே கல்லூரி வேன் பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 18 மாணவிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
20 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீராம் நகரில் ஒரு தனியார் கல்வியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 18 மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தையும், அகழாய்வு தளத்தையும் பார்வையிட கல்லூரிக்கு சொந்தமான ஒரு வேனில் நேற்று புறப்பட்டனர். அவர்கள் சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதியது.
வேன் மோதிய வேகத்தில் மரம் சாய்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆசிரியை கலையரசி, மாணவிகள் ராஜேஸ்வரி, சரிதா, நிகிலா உள்பட 20 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.
பரபரப்பு
இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சிவகங்கை அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர் ஒருவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தற்போது கல்லூரி வேன் விபத்தில் சிக்கி 20 பேர் காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.