மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்


மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்
x

கண்டியாங்குப்பத்தில் சமுதாயக்கூடம் மாட்டு தொழுவமாக மாறியது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கண்டியாங்குப்பம் கிராமம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூடத்தெரு, கோவில் வீதி, பழையனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.

ஆனால் தற்போது வரை அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் மாடுகள் கட்டும் தொழுவமாக மாறி வருகிறது.

ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுப விசேஷங்களுக்கு கட்டப்பட்ட இந்த சமுதாயக்கூடம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் வீணாகி வருகிறது.

இதுகுறித்த பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு அருகில் இருக்கும் மண்டபங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று விசேஷங்களை நடத்தி வருகின்றனர்.

இங்கு இருக்கும் சமுதாயக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அதனை முறையாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தொடர்ந்து கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story