பெண் டாக்டருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

ஓட்டலில் முன்பதிவை திடீரென்று ரத்து செய்ததால், தவிப்புக்குள்ளான பெண் டாக்டருக்கு ரூ.1 லட்சத்தை முன்பதிவு நிறுவனம் இழப்பீடு வழங்குமாறு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை
ஓட்டலில் முன்பதிவை திடீரென்று ரத்து செய்ததால், தவிப்புக்குள்ளான பெண் டாக்டருக்கு ரூ.1 லட்சத்தை முன்பதிவு நிறுவனம் இழப்பீடு வழங்குமாறு கோவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெண் டாக்டர்
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.உவனேஸ்வரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மராட்டியமாநிலம் புனேவில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை தேசிய அளவிலான மருத்துவ மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள, அரியானா மாநிலம் குருகிராமை மையமாக கொண்டு இயங்கிவரும், இணையதளத்தில் பயண முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் மூலம் 2019 மே 6-ந் தேதி ரூ.13,614 செலுத்தி, 4 நாட்கள் தங்குவதற்கு ஓட்டல் அறையை முன்பதிவு செய்தேன். அவர்களும் முன்பதிவு செய்து, அந்த தகவலை எனது செல்போன் எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, 2020 ஜனவரி 30-ம் தேதி புனேவில் உள்ள ஓட்டலுக்கு சென்றடைந்தேன். அங்கு முன்பதிவு விவரங்களை காண்பித்தபோது, அங்கிருந்த பணியாளர், "உங்களது முன்பதிவு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பான தகவலும் முன்பதிவு செய்த நிறுவனத்துக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தை பலமுறை தொடர்புகொண்டு கேட்டும், அவர்கள் எனக்கு முறையான பதிலோ, மாற்று ஏற்பாடோ செய்து தரவில்லை.
தவிப்பு
புது இடம் என்பதால், இணையதளத்தில் தேடியும் மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகில் எந்த ஓட்டலும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், இரவு நேரத்தில் தனி நபராக வாடகை காரில் பயணித்து ஓட்டலை தேட வேண்டியதானது. கடைசியில் ஒரு ஓட்டலை கண்டுபிடித்தேன். அங்கு தனியாக தங்குவது பாதுகாப்பற்றதாகவே தோன்றியதால், இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. பின்னர், மறுநாள் வேறு ஒரு ஓட்டலை முன்பதிவு செய்து அங்கு இடம்மாறினேன். மேலும், நான் முன்பதிவுக்காக செலுத்தி தொகைய பலமுறை கேட்ட பிறகு 2020 பிப்ரவரி 8-ம் தேதி ரூ.12,814 மட்டும் வழங்கினர். வெவ்வேறு ஓட்டல்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அதற்கு கூடுதலாக செலவானது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு வக்கீல்மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு உரிய பதில் இல்லை. எனவே, எனக்கு கூடுதலாக ஏற்பட்ட செலவை திருப்பி அளிக்கவும், மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் பயண முன்பதிவு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
ரூ.1 லட்சம் இழப்பீடு
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "ஓட்டல் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் மனுதாரர் வேறு இடங்களில் தங்க செலவான ரூ.19,539-ஐ 9 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும். அதோடு, சேவைகுறைபாடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரத்தை பயண முன்பதிவு செய்யும் நிறுவனம் அளிக்க வேண்டும்"என உத்தரவிட்டனர்.






