குழப்பத்தை ஏற்படுத்திய பெயர் பலகை மாற்றம்
‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி-பாலக் காடு சாலையில் குழப்பத்தை ஏற்படுத்திய பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
'தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி-பாலக் காடு சாலையில் குழப்பத்தை ஏற்படுத்திய பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்டது.
பெயர் பலகை மாற்றம்
பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணிக்கு அகற்றப்பட்ட பெயர் பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமபட்டிணம் பிரிவில் அதிகாரிகள் தப்பட்டைகிழவன்புதூர் பிரிவு என்று தவறுதலாக பெயர் பலகையை வைத்தனர்.
பொதுமக்கள் பஸ்சில் வந்தாலும் ராமபட்டிணம் பிரிவு என்று கூறி தான் டிக்கெட் எடுப்பார்கள். பெயர் பலகை மாற்றம் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து கடந்த 30-ந் தேதி 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் தவறுதலாக இருந்த பெயர் பலகையை மாற்றி, புதிதாக ராமபட்டிணம் பிரிவு, தப்பட்டைகிழவன்புதூர் என்று வைத்தனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விபத்துகளை தடுக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பாலக்காடு ரோடு விரிவாக்க பணி முடிந்ததும் தப்பட்டைகிழவன்புதூர் பிரிவு என்று பெயர் பலகையை தவறாக வைத்தனர். இதுகுறித்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், 'தினத்தந்தி'யில் செய்தி வெளியான பிறகு மீண்டும் சரியாக பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மேலும் ராமபட்டிணம் பிரிவில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. சாலையை அகலப்படுத்தியதால் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.