வணிக வளாகம் அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்


வணிக வளாகம் அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்
x

திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் ரூ.20 கோடியில் வணிக வளாகம் அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் ரூ.20 கோடியில் வணிக வளாகம் அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கருத்து கேட்பு கூட்டம்

திருவண்ணாமலையின் மையப் பகுதியில் பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட், ஜோதி பூ மார்க்கெட், பழக்கடைகள் என அனைத்தும் தேரடி வீதியில் அமைந்து உள்ளது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 2.6 ஏக்கர் இடத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதியுடன் கூடிய வணிக வளாகம் ரூ.20 கோடி மதிப்பில் கட்ட தற்போது திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறது.

இந்த வணிக வளாகம் அமைப்பது குறித்து காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள், பழ வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருடனான திருவண்ணாமலை நகராட்சி கூட்ட அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் கட்டப்படவுள்ள வணிக வளாகத்தின் மாதிரி வரைபடங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது. இரண்டு தளங்களில் அமைய உள்ள இந்த வணிக வளாகத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட் அமைய உள்ளதாக நகராட்சி ஆணையாளர் முருகேசன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

அடிப்படை வசதிகள்

பொதுமக்கள், வியாபாரிகள் வரி கட்டினாலும் கட்டவில்லை என்றாலும் நகராட்சி செய்ய வேண்டிய குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கும். திருவண்ணாமலை நகராட்சியில் பல கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை நகர வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் கட்டப்பட வேண்டிய கட்டணங்களாக இருந்தாலும், வரியாக இருந்தாலும், வாடகையாக இருந்தாலும் எதையும் அவர்கள் முழுமையாக செலுத்துவதில்லை. இதனால் நகராட்சி சார்பில் சிறு, சிறு வேலைகளை கூட செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

நகராட்சிக்கு வரவேண்டிய வருமானம் முறையாக வந்து கொண்டே இருந்தால் நகராட்சி இன்னும் பல்வேறு அடிப்படை வசதிகளை வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் விரைந்து நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story