மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி அக்காள்- தங்கை பலி


மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி அக்காள்- தங்கை பலி
x

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற அக்காள்- தங்கை பலியானார்கள்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (வயது 16), வர்ஷாஸ்ரீ (12) என 2 மகள்கள் இருந்தனர். ஆம்பூர் புதுகோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஜெயஸ்ரீ பிளஸ்-1, வர்ஷாஸ்ரீ 6-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அக்காள்- தங்கை பலி

ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டபாணி மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீதும் மோதி சர்வீஸ் சாலையில் புகுந்தது. அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சக்கரங்கள் ஜெயஸ்ரீ, வர்ஷா ஸ்ரீ ஆகியோர் மீது ஏறியதில் அவர்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டபாணி படுகாயம் அடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சென்னையை சேர்ந்த ஜார்ஜ் ஜெயசீலன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story