மோட்டார் சைக்கிளில் சென்ற சமையல் தொழிலாளி பலி
பன்றி குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 73). அவருடைய உறவினர் ரமேஷ் (33). சமையல் தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். வேலுச்சாமி பின்னால் அமர்ந்திருந்தார். சிலுவத்தூர் சாலையில், உத்தனம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது, பன்றி ஒன்று சாலையை கடந்தது. இதனால் ரமேஷ், மோட்டார் சைக்கிளில் திடீர் பிரேக் போட்டார். இதில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார். ரமேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.