கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ''ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேரை கொண்ட குழுவை அமைத்து, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார். ஆனால், மனுதாரர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட டாக்டர்களை நீதிபதி நியமிக்காததால், இந்த உத்தரவை எதிர்த்து ராமலிங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், ஐகோர்ட்டு நியமித்த டாக்டர்கள் குழு, அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது.
பெற்றோர் மறுப்பு
இந்தநிலையில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''மறு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுக்கின்றனர். உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான மனுவை அவசரம் கருதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மாணவியின் தந்தை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பபெற்று விட்டார் எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்'' என்று முறையிட்டார்.
இன்று விசாரணை
மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ''ஐகோர்ட்டு உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வக்கீல்கள் இல்லாமலேயே மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்பு டாக்டர்களை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மீண்டும் ஐகோர்ட்டில் முறையிடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை தரப்புக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு முதல் வழக்காக இன்று விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.