தேவர்சோலை அருகே காட்டு யானையிடம் சிக்கி உயிர் பிழைத்த தம்பதி
தேவர்சோலை அருகே காட்டு யானை இடம் சிக்கி அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிர் தப்பினர். மேலும் காட்டு யானையால் வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழுந்தது.
கூடலூர்
தேவர்சோலை அருகே காட்டு யானை இடம் சிக்கி அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிர் தப்பினர். மேலும் காட்டு யானையால் வீட்டின் மேற்கூரையும் உடைந்து விழுந்தது.
ஊருக்குள் நுழையும் காட்டு யானை
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியேறி தினமும் ஊருக்குள் நுழைகிறது. இதனால் மாலை நேரம் தொடங்கியதும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களையும் தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினர் அடிக்கடி வந்து காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தாலும் தொடர்ந்து ஊருக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
சிக்கிய தம்பதியினர்
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு காட்டு யானை அப்பகுதிக்கு வந்தது. தொடர்ந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இந்த சமயத்தில் சத்தம் கேட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற கூலித்தொழிலாளி தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அவருடன் மனைவி சாந்தியும் வந்தார். அப்போது வீட்டின் அருகே காட்டு யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் வீட்டுக்குள் செல்ல முயன்ற சமயத்தில் காட்டு யானையும் பின்தொடர்ந்து வந்து ராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தியை தும்பிக்கையால் தாக்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜன், சாந்தி ஆகியோர் பல கட்டமாக போராடி வீட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தனர். மேலும் ஆவேசம் அடைந்த காட்டு யானையும் வீட்டுக்குள் செல்ல முயன்றது. அப்போது வீட்டின் மேற்கூரை காட்டு யானையின் தலையில் தட்டியது. தொடர்ந்து யானை வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதனிடையே யானை மோதிய வேகத்தில் வீட்டின் மேற்கூறையும் உடைந்து விழுந்தது.
வனத்துறையினர் விசாரணை
இந்த சமயத்தில் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர். இதனால் யானை அங்கிருந்து சென்றது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.