பசுமாடு உயிருடன் மீட்பு; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு


பசுமாடு உயிருடன் மீட்பு; தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
x

50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டெடுத்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பார்வதி (வயது 55). விவசாயியான இவர், வழக்கம்போல் பசு மாட்டை கசவராஜபேட்டை கிராமத்திற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு திடீரென தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்து மாடு சத்தமிடவே மாட்டின் உரிமையாளர் பார்வதி கிணற்றுக்கு அருகே சென்று பார்த்தபோது, மாடு கிணற்றில் தவித்துக் கொண்ருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக திருத்தணி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

திருத்தணி தீயணைப்பு வீரர்கள் கனகம்மாசத்திரம் அருகே மீட்பு பணிக்கு சென்று இருந்ததால் அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டெடுத்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story