நாட்டு வெடி வெடித்ததில் பசுமாடு படுகாயம்
புதுக்கோட்டை அருகே நாட்டு வெடி வெடித்ததில் பசு மாடு காயமடைந்தது.
புதுக்கோட்டை அருகே மறவப்பட்டியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. இதற்கிடையில் பன்றிகளை சிலர் பிடித்துக்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மறவப்பட்டியை சேர்ந்த சோலையம்மாள் (வயது 50) என்பவரது பசு மாடு இன்று மாலை வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் புற்களை மேய சென்றது.அப்போது அங்கு திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அப்பகுதியில் கபடி விளையாடிக்கொண்டிருந்த வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விரைந்து வந்து பார்த்த போது பசு மாட்டின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. வலியால் மாடு துடித்ததை கண்டு சோகமடைந்தனர். அந்த இடத்தில் கிடந்த மாதுளம் பழத்தை பசு மாடு தின்ற போது அதில் இருந்த நாட்டு வெடி வெடித்ததில் பசு மாட்டிற்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து வந்த கால்நடை மருத்துவர் பசு மாட்டிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சரக்கு வேனில் மாடு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பன்றியை பிடிக்க சிலர் நாட்டு வெடியை பயன்படுத்தி வருவதும், அதில் பழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை மாடு தின்றதில் வெடித்து காயம் ஏற்பட்டதும் தெரிந்தது. இதற்கிடையில் வெடி சத்தம் கேட்டதில் அருகில் இருந்த மற்றொரு மாடு பதறி அடித்து ஓடியதில் காலில் லேசாக காயம் ஏற்பட்டது.