ஜல்லிக்கட்டில் காளை முட்டி கண் பார்வை இழந்த மாடுபிடி வீரர் சாவு
கரூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி கண் பார்வை இழந்த மாடுபிடி வீரர் பரிதாபமாக இறந்தார்.
காளை கொம்பு கண்ணில் குத்தியது
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமமக்கள் சார்பாக 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 756 காளைகள் களத்தில் இறங்கின. 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.இதில் வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவக்குமார் (வயது 23) என்பவர் ஜல்லிக்கட்டில் 4-வது சுற்றில் களம் இறங்கினார். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளையை அடக்க முயன்றபோது காளையின் கூர்மையான கொம்பு சிவக்குமாரின் வலது கண்ணில் குத்தியது.
மாடுபிடி வீரர் சாவு
இதில் அவரது கண்விழி பிதுங்கி வெளியே வந்ததால் வலி தாங்க முடியாமல் துடித்தார். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவக்குமாரின் தந்தை பழனிச்சாமி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.இறந்த சிவக்குமாரின் குடும்பம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பலியான சிவக்குமார் காவல்காரன்பட்டியில் சொந்தமாக மெக்கானிக்கடை நடத்தி வந்தார். இவரது தந்தை பழனிச்சாமி, தாய் அஞ்சலை இருவரும் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். சிவக்குமாரின் சகோதரர் ஆனந்த் வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். தங்கை சரண்யா பிளஸ்-2 படித்துள்ளார்.
பெற்றோர் கதறல்
இதுபற்றி சிவக்குமாரின் தந்தை பழனிச்சாமி, தாய் அஞ்சலை கூறுகையில், எங்களிடம் அனுமதி கேட்டு தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சென்றான். நாங்களும் ஜல்லிக்கட்டு பார்க்க சென்றிருந்தோம். ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தபோது சிவக்குமார் என்ற மாடுபிடி வீரருக்கு கண்ணில் காளையின் கொம்பு குத்திவிட்டது என்று அறிவித்தார்கள். நாங்கள் எங்கள் மகனாக இருக்குமோ என்ற சந்தேகப்பட்டு சென்றபோது, அதற்குள் அவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டார்கள். விடிய, விடிய நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். முதலில் வலது கண் பார்வை பறிபோய் விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரு கண் பார்வை இழந்தாலும் மகனை காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பி இருந்தோம். ஆனால் அதிகாலை இறந்து விட்டான் என கண்ணீர் மல்க கூறினர். இதையடுத்து சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளை முட்டி கண் பார்வை இழந்த மாடுபிடி வீரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.