கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலை
கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ராஜன் வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ெரயில் நிலையம் அருகே பிரதான பாசன தெற்கு ராஜன் வாய்க்கால் செல்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வாய்க்கால் படித்துறையில் இறங்கி அப்பகுதி மக்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்கால் கரை ஓரத்தில் முதலை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது முதலை அங்கு இல்ைல. இதையடுத்து கொள்ளிடம் நீர்வள ஆதாரத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
முதலை கிடந்தது
கடந்த சில தினங்களாக தெற்குராஜன் வாய்க்காலில் குறைந்த தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நேற்று சிலர் வழக்கம் போல் அதே இடத்தில் உள்ள படித்துறையில் இறங்கி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலின் கரை ஓரத்தில் முதலை படுத்து கிடந்தது. இதனை பார்த்த அவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். சத்தம் கேட்டவுடன் முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்து விட்டது. எனவே அதே பகுதியில் பதுங்கியுள்ள முதலையை வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பிடித்து பாதுகாப்பாக உரிய இடங்களில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாய்க்கால் கரை ஓரத்தில் தொடர்ந்து முதலை கிடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.