தேவநாதசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


தேவநாதசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தேவநாதசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் 3 ஆயிரம் பேர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்

2-வது சனிக்கிழமை

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

3 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து...

இதனை தொடர்ந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் சாலக்கரை இலுப்பை தோப்பில் மொட்டை அடிக்கும் கூடாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து, புனித நீராடி கோவிலுக்கு வந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story