செங்கள் சூளையில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்: நடு இரவில் அழுத குழந்தை: அடித்து கொன்ற கொடூர தாய்...!


செங்கள் சூளையில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்: நடு இரவில் அழுத குழந்தை: அடித்து கொன்ற கொடூர தாய்...!
x
தினத்தந்தி 9 May 2023 8:53 AM IST (Updated: 9 May 2023 9:04 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக்கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டிய கொடூரம் நடந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் சிக்கம்பட்டி புதூர் காடம்பட்டி பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லேஷ் என்பவர், கலைவாணி என்ற பெண் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் வந்து வேலை கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு செங்கல் சூளையில் கூலி வேலை கொடுக்கப்பட்டது. இதனால் குழந்தையுடன் இருவரும் அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்தனர். இதற்கிடையே சம்பவத்தன்று குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று இருவரும் கூறி விட்டனர். பின்னர் குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்தநிலையில், நேற்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேஷ், கலைவாணி இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த கலைவாணி (27), ஒரு வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மல்லேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன்படி குழந்தையுடன் கலைவாணியை அழைத்துக்கொண்டு மல்லேஷ் மேற்படி செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தார்.

சம்பவத்தன்று இரவு கலைவாணியும், மல்லேசும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கலைவாணி, மல்லேஷ் இருவரும் குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குழந்தை அலறி துடித்தது. அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி நாடகமாடிவிட்டு குழந்தையை, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு இருவரும் தலைமறைவானது தெரியவந்தது.

மேலும் குழந்தை இறந்தது குறித்து அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் வெளியூருக்கு தப்பி செல்ல மல்லேசும், கலைவாணியும் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. அதற்குள் போலீசார் இருவரையும் கைது செய்து விட்டனர்.


Next Story