சேதமடைந்த மின்கம்பம் உடைந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் காயம்
குளித்தலை அருகே சேதமடைந்த மின்கம்பம் உடைந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் காயம் அடைந்தார். மின்கம்பத்தை சரிசெய்ய மின்வாரியம் காலம் தாழ்த்தியதால் விபத்து நடந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மின்கம்பம் விழுந்து படுகாயம்
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 42). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தெற்கு மணத்தட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தெருவில் இருந்த சேதமடைந்த மின்கம்பம் ஒன்று அடிப்பகுதியுடன் உடைந்து அவர் மீது விழுந்ததால் அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மின்கம்பத்தின் நுனிப்பகுதி அப்பகுதியில் உள்ள ரவி என்பவரின் வீட்டின் தகரத்தின் மீது விழுந்து முற்றிலும் சாய்ந்து விட்டது. இதனால் பிரசாந்தின் தோள்பட்டை பகுதியில் உள் காயம் ஏற்பட்டுள்ளது.
உயிர் தப்பினார்
இதைப் பார்த்த அங்கிருந்த அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிந்த மின்கம்பம் அங்குள்ள வீட்டின் மீது விழாமல் இருந்திருந்தால் முழு கம்பமும் பிரசாந்தின் மீது விழுந்திருக்கும். ஆனால் வீட்டின் மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
அதுபோல மின்கம்பம் உடைந்து விழும்போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்படவில்லை எனில் மின்சாரம் பல வீடுகளில் பாய்ந்து பெரும் மின்விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்கம்பம் உடைந்து விழுந்து சேதம் ஆனது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மின்வாரியத்தினர் சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அங்கு புதிய மின்கம்பத்தை பொருத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் கூறிய புகார்கள் பின்வருமாறு:-
மின்கம்பங்கள் சேதம்
தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த பொறியாளர் பிரபாகரன்:-
தெற்கு மணத்தட்டை பகுதியில் உள்ள பல்வேறு மின்கம்பங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. இதில் பெரும்பாலான மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக்கோரி பலமுறை தெரிவித்தும் மின்சார வாரியத்தினர் அலட்சியப்போக்குடன் இருந்து வருகின்றனர்.
தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த நித்தியகுமார்:- இந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வரும் காரணத்தாலும் ஏற்கனவே மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருந்ததாலும் மின்கம்பம் உடைந்து விழுந்தது. மின்வாரியத்தினர் உடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து விட்டனர். எனினும் மின்கம்பம் சேதம் அடைந்த பொழுதே மாற்றி இருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம்.
காலம் தாழ்த்தி வந்தனர்
தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த விவசாயி நல்லதம்பி:-
இந்த பகுதியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே மின்வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மின் வாரியத்தினர் புதிய மின்கம்பம் அமைக்க காலம் தாழ்த்தி வந்தனர். மின்கம்பம் உடைந்து விழுந்தபோது நல்லவேளையாக பெரும் விபத்தோ அல்லது உயிர் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.