பழுதடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2023 1:30 AM IST (Updated: 2 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சேரங்கோட்டில் பழுதடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

சேரங்கோட்டில் பழுதடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கட்டிடத்தில் விரிசல்

பந்தலூர் அருகே சேரங்கோடு, சிங்கோனா, படச்சேரி, டேன்டீ(அரசு தேயிலை தோட்டக்கழகம்) ரேஞ்ச் எண்.2, திருவள்ளூவர் நகர், சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நூலகம் இல்லாமல் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். இதையடுத்து சேரங்கோட்டில் நூலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேரங்கோடு சமுதாயக்கூடம் அருகே கிளை நூலகம் அமைக்கப்பட்டது. அங்கு மாணவர்கள் உறுப்பினர்களாகி புத்தகங்களை தேர்வு செய்து படித்து வந்தனர். இதற்கிடையே நூலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும் போது உள்ளே மழைநீர் கசிகிறது. இதனால் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ள நூல்கள், புத்தகங்கள் நனையும் அபாயம் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

மேலும் நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வாசகர்கள், மாணவ-மாணவிகள் நனையும் நிலை உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பழுதடைந்து கிடப்பதோடு, மின் ஒயர் அறுந்து விழுந்தது. இதனால் நூலகத்தில் மின் இணைப்பு இல்லை. இதன் காரணமாக நூலகத்தை வாசகர்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, இந்த நிலையை போக்க நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். மேலும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story