பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டது
பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பொன்னவராயன்கோட்டை ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னவராயன் கோட்டை உக்கடை பகுதியில் உள்ளது நியூ ஹவுசிங் யூனிட் என்று சொல்லக்கூடிய குடியிருப்பு பகுதி. இந்தப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இதில் விவேகானந்த நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து நின்றது. தற்போது மழைக்காலம் என்பதாலும், காற்றும் அதிவேகமாக வீசுவதாலும் எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் முறிந்து விழக்கூடிய அபாயம் இருந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சப்பட்டனர்.
கோரிக்கை
இந்த மின்கம்பம் சாய்ந்தால் அருகில் உள்ள வீட்டின் மீதோ அல்லது நடு ரோட்டிலோ சாயக்கூடிய சூழ்நிலை இருந்தது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த மின்கம்பத்தை மாற்றி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புதிய மின்கம்பம் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
புதிய மின்கம்பம் நடப்பட்டது
இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பொன்னவராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கீதாஞ்சலி இளமுருகன் போர்க்கால அடிப்படையில் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு ஆபத்தான மின்கம்பத்ைத அகற்றி, புதிய மின்கம்பம் நட நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.