உளுந்தூர்பேட்டை அருகேவயலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த விவசாயிகொலையா? போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகேவயலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த விவசாயிகொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வயலில் ரத்த காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் (வயது 50). இவருக்கு அம்சவல்லி என்ற மனைவியும், வினோத் (32), விஜய் (30) ஆகிய 2 மகன்களும், பிரியா (27) என்ற மகளும் உள்ளனர். வீரன் தனது அண்ணன் ராஜேந்திரனுக்கும். தனக்கும் பொதுவாக உள்ள 3½ ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வீரன் வயலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் மாயமான வீரனை தேடி வந்தனர்.

ரத்த காயங்களுடன் பிணம்

இந்த நிலையில் வீரன் நேற்று மாலை அதேஊரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயலில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தாா். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற விவசாய கூலி தொழிலாளர்கள் இதுபற்றி வீரன் குடும்பத்தினருக்கும், எடைக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வீரனின் உடலை பார்வையிட்டனர். இதனிடையே அங்கு வந்த குடும்பத்தினர் வீரன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து வீரன் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக வீரனை யாரேனும் அடித்துக் கொலை செய்து வயலில் போட்டுச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story