பிணமாக கிடந்த வடமாநில தொழிலாளி
பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடை அருகே வடமாநில தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடை அருகே வடமாநில தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் பிரிவு விநாயகர் கோவில் எதிரே டாஸ்மாக் கடை அருகே நேற்று வாலிபர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த நாகினாமான்ஜி பைரட்வா என்பவரது மகன் சிவ்டாட் மான்ஜி (வயது 31) என்பதும், அவர் பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
சிவ்டாட் மான்ஜி தினமும் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மது அருந்த செல்வதாக சக தொழிலாளர்களுடன் கூறி விட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால், வெகு நேரமாகியும் சிவ்டாட் மான்ஜி தனியார் நிறுவனத்துக்கு திரும்பி வரவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மது அருந்த வந்த போது ஏற்பட்ட தகராறில், சிவ்டாட் மான்ஜி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.