உடலில் வெட்டுக்காயங்களுடன் செத்துக்கிடந்த சினை பசு
உடலில் வெட்டுக்காயங்களுடன் சினை பசு செத்துக்கிடந்தது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ளது. அங்கு மாட்டு கொட்டகையும் உள்ளது. கண்ணன் நேற்று முன்தினம் இரவு மேய்ச்சல் முடிந்து 2 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகளை வழக்கம் போல் கொட்டகையில் கட்டிவிட்டு, தீவனம் வைத்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நேற்று காலை பால் கறப்பதற்காக கொட்டகைக்கு வந்தபோது, அங்கிருந்த சினை பசு உடலில் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் செத்துக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் மற்றொரு பசு மாடும், கன்றுக்குட்டிகளும் நல்ல நிலையில் நின்று கொண்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சினை பசுவை வெட்டி கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.