இறந்து கிடந்த காட்டு யானை


இறந்து கிடந்த காட்டு யானை
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை வனப்பகுதியில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

சிறுமுகை வனப்பகுதியில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது.

காட்டு யானை

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி காட்டு யானைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன. இந்தநிலையில் சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், சிறப்பு ரோந்து குழுவினர் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் வனப்பகுதியில் 4 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

யானையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கோவை மண்டல உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வன கால்நடை மருத்துவர் சுகுமார், வனச்சரக அலுவலர் செந்தில்குமார், சிறுமுகை கால்நடை மருத்துவ அலுவலர் தியாகராஜன் மற்றும் வன பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடற்கூறு பரிசோதனை

பின்னர் டாக்டர் சுகுமார் முன்னிலையில் இறந்து கிடந்த யானையின் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. யானையின் உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறும்போது, இறந்த யானைக்கு 4 வயது இருக்கும். உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டு யானை இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. யானையின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றார்.


Next Story