கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
வள்ளிமலை அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
வள்ளிமலை
காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த எருக்கம்பட்டு ஊராட்சி சின்னபெருமாள்குப்பம் பகுதியில் இன்று காலை அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று நீர் தேடி கிராமத்துக்குள் வந்துள்ளது.
அப்போது புள்ளிமானை நாய்கள் துரத்தியது. இதனால் ஓடிய புள்ளிமான் அந்த கிராமத்தில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை கண்ட அப்பகுதியில் நிலத்தில் வேலை செய்திருந்த பெண்கள் இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இளைஞர்களும், கிராம மக்களும் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையை சேர்ந்த அரிகிருஷ்ணன். கருணா ஆகியோர் வந்து, புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அருகில் உள்ள காப்புக்காட்டில் புள்ளிமானை விட்டனர்.