வெறிச்சோடிய மார்க்கெட்
காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்தாலும் தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தினமும் 70 லோடு காய்கறிகள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 30 லாரிகளில் மட்டுமே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனையும் சரிந்து வருவதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்தாலும் தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தினமும் 70 லோடு காய்கறிகள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 30 லாரிகளில் மட்டுமே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனையும் சரிந்து வருவதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கட்டுக்குள் வந்த காய்கறிகள் விலை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100-க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், பச்சைமிளகாய், சின்னவெங்காயம், இஞ்சி போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மழை காரணமாகவும், விளைச்சல் குறைவாக இருந்ததால் இந்த விலை உயர்வு காணப்பட்டது.
அதன் பின்னர் விலை குறையத்தொடங்கியது. தற்போது காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால் விற்பனை தான் இல்லை. தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதே போல் தஞ்சையில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வெறிச்சோடிய மார்க்கெட்
தஞ்சையில் தற்போது காய்கறிகளின் விலை கட்டுக்குள் இருந்தாலும் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்ற நிலையில் தற்போது ரூ.30 லட்சம் அளவுக்கே வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று காமராஜர் மார்க்கெட்டியில் காய்கறிகள் வாங்க ஆள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வியாபாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தஞ்சையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை (கிலோ கணக்கில்) வருமாறு:-
தக்காளி ரூ.12, கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.15, கேரட் ரூ.45, சவ்சவ் ரூ.20, பாகற்காய் ரூ.40, குடைமிளகாய் ரூ.50, பச்சைமிளகாய் ரூ.45, பீன்ஸ் ரூ.50, இஞ்சி ரூ.320, பீட்ரூட் ரூ.40, காலிபிளவர் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.20, எலுமிச்சை பழம் ரூ.110, சுரைக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.25, கோவக்காய் ரூ.40, பல்லாரி ரூ.35, சின்னவெங்காயம் ரூ.50.
விற்பனை கடும் சரிவு
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சிறிய கடைகள் ரூ.6000, பெரிய கடைகள் ரூ.18 ஆயிரம் என பொது ஏலத்தில் எடுத்து வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பு காய்கறிகள் விற்பனை அதிக அளவில் காமராஜர் மார்க்கெட்டில் நடைபெற்று வந்தன. கொரோனாவுக்கு பின்னர் ஆங்காங்கே சாலையோரங்களில் புதிது, புதிதாக காய்கறி கடைகள் முளைத்ததால் மார்க்கெட்டில் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. காய்கறிகளின் வரத்தும் தற்போது பாதியாக குறைந்துள்ளது. மார்க்கெட்டில் போதிய அளவு விற்பனை நடைபெறாததால் 150-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டியே கிடக்கின்றன. வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறாததால் வியாபாரிகளும் கலக்கம் அடைந்து வருகின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் வாடகை செலுத்தும் அளவுக்கு கூட வியாபாரம் நடைபெறாததால் தவித்து வருகிறார்கள் என்றனர்