பொள்ளாச்சி கலைத் திருவிழாவில் டிரம்ஸ் இசைத்து மாற்றுத்திறனாளி மாணவர் அசத்தல்
பொள்ளாச்சியில் நடந்த கலைத்திருவிழாவில் டிரம்ஸ் இசைத்து மாற்றுத்திறனாளி மாணவர் அசத்தினார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த கலைத்திருவிழாவில் டிரம்ஸ் இசைத்து மாற்றுத்திறனாளி மாணவர் அசத்தினார்.
கலைத்திருவிழா
தமிழக பள்ளி, கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த நிலையில் மாநில அளவிலான போட்டிகள் பொள்ளாச்சியில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது.
போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். நேற்று டிரம்ஸ், தவில் இசை ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜேசன் டிரம்ஸ் வாசித்த அசத்தினார். இதுகுறித்து அவர்கூறியதாவது:-
நிச்சயம் வெற்றி பெறுவேன்
அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தேன். தற்போது 9-ம் வகுப்பு சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். தேவாலயத்திற்கு செல்லும் போது அங்கு டிரம்ஸ் வாசிப்பதை பார்த்து எனக்கும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக யாரிடமும் பயிற்சிக்கு செல்லவில்லை. நானே தானாகவே பழகி கொண்டேன். ஹியர் போனை காதில் வைத்துக் கொண்டு பாட்டிற்கு ஏற்ப என்னால் டிரம்ஸ் வாசிக்க முடியும். நிச்சயம் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நிறைவு
போட்டிகள் குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர். பொள்ளாச்சியில் நடந்த கலைத்திருவிழாவில் டிரம்ஸ் போட்டியில் 27 பள்ளி மாணவர்களும், தவில் இசையில் 22 பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். இதுவரைக்கும் பம்பை, உடுக்கை, உரும்பி, மிருதங்கம், தபேலா உள்ளிட்ட இசை போட்டிகள் நடைபெற்று உள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) செண்டை மேளம் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.