திருவாரூருக்கு செல்ல நேரடி பஸ் வசதி வேண்டும்
முத்துப்பேட்டையில் இருந்து மாவட்ட தலைநகரான திருவாரூருக்கு செல்ல நேரடி பஸ் வசதி வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் இருந்து மாவட்ட தலைநகரான திருவாரூருக்கு செல்ல நேரடி பஸ் வசதி வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சுற்றுலாத்தலங்கள் நிறைந்த பகுதி
முத்துப்பேட்டை சுற்றுலா தலங்கள் நிறைந்த இயற்கை அழகுக்கு பஞ்சமில்லாத ஊர். திருவாரூர் மாவட்டத்தில் கடைசி ஊரான முத்துப்பேட்டை, ஒரு பக்கம் தஞ்சை மாவட்டம், மறுபக்கம் நாகை மாவட்டம், மறுபக்கம் இந்தியாவின் தெற்கு எல்லை கடல்பகுதி என கடைசியாக அமைந்திருக்கும் ஒரு சிறிய நகர்தான் முத்துப்பேட்டை. ஆனால் ஒரு பெரிய நகருக்குண்டான தகுதி அனைத்தும் இப்பகுதியில் உள்ளது.
இந்த ஊருக்கு சிறப்பை சேர்க்கும் வகையில் ஆசியாவிலேயே பெரிய காடான சுனாமியை தடுத்தும், கஜா புயலை தாங்கிய மிகப்பெரிய அலையாத்தி காடுகள் படர்ந்துள்ளது.
சிறப்புவாய்ந்த வழிபாட்டு தலங்கள்
சுற்றுலா பயணிகளை கவர்ந்த லகூன் தீவுகள், தொண்டியக்காடு மணல் திட்டு, மன்னாரான் தீவு, உதயமார்த்தாண்டபுரம் மற்றும் தொண்டியக்காடு பறவைகள் சரணாலயங்கள் என சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும். பக்தர் நேசிக்கும் ஜாம்புவானோடை தர்கா மற்றும் அதன் அருகே உள்ள ஆற்றங்கரை தர்கா, அம்மா தர்கா, தேத்தான்கொட்டை தர்கா, தில்லைவிளாகம் ராமர்கோவில், இடும்பாவனம் கற்பகநாதர் கோவில், துளசியாபட்டிணம் அவ்வையார் கோவில், கோவிலூர் பெரியநாயகி அம்பாள் கோவில், பேட்டை சிவன் கோவில்கள் போன்ற சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் நிறைந்து உள்ளன.
பஸ் வசதி இல்லை
அதுமட்டுமல்லாமல் சுங்க இலாகா அலுவலகம், வனத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்களும், பல தேசிய வங்கிகளும் உள்ளன. இப்படி இந்த வசதிகள் நிறைந்த இந்த ஊரிலிருந்து மாவட்ட தலைநகர் திருவாரூருக்கு செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். திருவாரூருக்கு செல்ல திருத்துறைப்பூண்டி வழியாக அல்லது மன்னார்குடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு நேரடி பஸ்கள் ஏராளமானது உள்ளது. புதுச்சேரி, கோவை போன்ற ஊர்களுக்கு கூட நேரடி பஸ் வசதிகள் உள்ளன.
வளர்ச்சியை பாதிக்கும்
இப்படி இருக்கும்போது மாவட்ட தலைநகர் திருவாரூருக்கு நேரடி பஸ் வசதி இல்லாதது ஊரின் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனவே முத்துப்பேட்டையில் இருந்து மாவட்ட தலைநகர் திருவாரூருக்கு செல்ல நேரடி பஸ் வசதி வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.