கூரைவீடு தீப்பிடித்து எரிந்ததில் மாற்றுத்திறனாளி சாவு


கூரைவீடு தீப்பிடித்து எரிந்ததில் மாற்றுத்திறனாளி சாவு
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே கூரைவீடு தீப்பிடித்து எரிந்ததில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே கூரைவீடு தீப்பிடித்து எரிந்ததில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் ராஜேஷ் மனைவி செல்வி 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று கூரை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பரிதாப சாவு

இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ராஜேசுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? ராஜேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்தவர்கள் யாரேனும் அவரது வீட்டுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூரை வீடு தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story