ஆர்வம் காட்டாத பொதுமக்கள்
சிவகாசியில் நடைபெற்ற ெபாது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் நடைபெற்ற ெபாது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.
குறைதீர்க்கும் முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாகளிலும் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ரேஷன் கார்டில் உள்ள பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண்கள் மாற்றம் ஆகியவைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது. வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி முன்னிலையில் 4 மணி நேரம் நடைபெற்றது.
19 பேர் மட்டுமே பங்கேற்பு
இதில் 19 பேர் மட்டும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டனர். அதிகாரிகள் எதிர்பார்த்த அளவில் பொதுமக்கள் முகாமில் கலந்து கொள்ளவில்லை. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம் ஆகியவைகளில் சனிக்கிழமை தோறும் சம்பளம் வழங்கப்படும். இதுபோன்ற நாட்களில் பொதுமக்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் இனி வரும் காலங்களில் சிறப்பு முகாம்களை வேறு நாட்களில் நடத்த வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம் சனிக்கிழமைகளில் நடத்தப்படுவதால் பல்வேறு இடங்களில் கூலி தொழில் செய்து வரும் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாம் நடத்தும்போது பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.