மந்தாரக்குப்பத்தில் லாரி டிப்பரில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பிகள் தொடர் மின்தடையால் மக்கள் அவதி


மந்தாரக்குப்பத்தில்  லாரி டிப்பரில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பிகள்  தொடர் மின்தடையால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

மந்தாரக்குப்பத்தில் லாரி டிப்பரில் சிக்கி அறுந்து விழுந்த மின்கம்பிகளால் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கடலூர்


மந்தாரக்குப்பம்,

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2-ல் நிலக்கரி வெட்டுவதற்கு போதுமான இடம் இல்லாததால் நிலக்கரி முற்றிலும் தீர்ந்துவிட்டது. இதனால் மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கு வசதியாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் 1 ஏ-ல் இருந்து சுரங்கம் 2-க்கு லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் நேற்று லாரியில் நிலக்கரி கொண்டு சென்று இறக்கி விட்டு மீண்டும் திரும்பிய போது, லாரியின் டிப்பரை கீழே இறக்காமல் டிரைவர் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் வந்த போது, மேலே சென்ற மின் கம்பி டிப்பரில் சிக்கி அறுந்து விழுந்தது.

இதனால் மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், தெற்கு வெள்ளூர், வேப்பங்குறிச்சி, அம்மேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று மதியம் 1 மணி ஆகியும் அறுந்து விழுந்த மின் கம்பிகள் சரிசெய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.


Next Story