அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்க செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை விவரம் பின்வருமாறு;-
நாம் எப்போதோ சந்திப்பவர்கள் அல்ல, அவ்வப்போது சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள்தான். சந்தித்து கோரிக்கை வைத்தால்தான் நிறைவேற்றப்படும் என்பதாக இல்லாமல், நீங்கள் என்ன வேண்டும் என்று சிந்தித்தால் அதனை செயல்படுத்தித் தரும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய எல்லார்க்கும் எல்லாம் வழங்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையும் உண்டு. அனைவரும் உண்டு. திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது.
இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக நமது அரசு உள்ளது. சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் இவ்வரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தைத்தான். சிறுபான்மையினர் அமைப்புகள் சேர்ந்து தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியபோது, 'என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத்தான் செய்தேன்' என்றார் கலைஞர். அத்தகைய எண்ணம் கொண்டுதான் நானும் செயல்பட்டு வருகிறேன்.
மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.