மதுபோதையில் தாறுமாறாக ஆட்டோ ஓட்டியவரால் பரபரப்பு
திருவண்ணாமலையில் மதுபோதையில் தாறுமாறாக ஆட்டோ ஓட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு சாலையோரம் படுத்து தூங்கினார்.
திருவண்ணாமலை நகரில் சமீப நாட்களாக பல்வேறு சாலைகளில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ஒருவர் மதுபோதையில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா அருகில் இருந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவாயிலை நோக்கி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் ஆட்டோ ஓட்டி வந்த நபருக்கு போதை தலைக்கு ஏறியதால் அண்ணா நுழைவாயில் அருகில் உள்ள சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் ஆட்டோவை மோதினார்.
இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பின்னர் ஆட்டோவை ஓட்டி வந்த நபர் எதையும் கண்டுகொள்ளாமல் சாலையோரம் வந்து படுத்து தூங்கினார்.
விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அந்த பகுதியில் கூடினர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பினர்.
பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.