கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
நச்சலூர் அருகே கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவம் பார்த்தார்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி புரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். பின்னர் உரிய மருத்துவம் எதுவும் படிக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக நெய்தலூர் காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்.
பின்னர் பொதுமக்களின் புகார் எதிரொலியாக கிளினிக்கை காலி செய்துவிட்டு தனது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு பெரியசாமி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ேபாலி டாக்டர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் திவாகர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் புரசம்பட்டியில் பெரியசாமியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் மருத்துவம் படிக்காமல் போலியாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து போலி டாக்டர் பெரியசாமியை கைது செய்து, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து மருந்து பொருட்கள், ஊசிகள் ஆகியவற்றை ேபாலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.