அறுவடைக்கு தயாரான 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி


அறுவடைக்கு தயாரான 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி
x

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வந்தவாசி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை விவசாயி டிராக்டர் ஓட்டி அழித்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை

வந்தவாசி

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வந்தவாசி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை விவசாயி டிராக்டர் ஓட்டி அழித்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

12 ஏக்கரில் கரும்பு

வந்தவாசி அருகே வழூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவை எந்திரம் வேலை செய்யாத காரணத்தால் சர்க்கரை ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது.

இதனால் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆலைக்கு கரும்பு பயிர் செய்த விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

சக்கரபாணி கடந்த ஆண்டும் 12 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் அறுவடை செய்தார்.

அப்போது செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் செஞ்சியில் உள்ள கரும்பு சர்க்கரை ஆலைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று நிர்வாகம் கூறியதால் கூலி ஆட்களை வைத்து கரும்பை வெட்டி அனுப்பினார். அப்போது பயிரிட்ட செலவு கூட தனக்கு கிடைக்கவில்லை என சக்கரபாணி கூறினார்.

டிராக்டர் மூலம் அழிப்பு

பின்னர் அவர் மீண்டும் கரும்பு பயிரிட்டார் அந்த பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்னும் அரவை தொடங்கவில்லை.

இதனால் கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பினால் நஷ்டம் ஏற்படும். எனவே, கரும்பு பயிரை அழிக்க அவர் முடிவு செய்தார்.

அதன்படி விவசாயம் செய்த கரும்பை டிராக்டர் மூலம் அவர் அழித்து விட்டார். தான் ஆலைக்கு ஆட்களை வைத்து கரும்புவெட்டி அனுப்பினால் நஷ்டம் ஏற்படும் எனவும் இதனால் கரும்பு பயிர்களை வயலிலேயே அழித்து விட்டார்.

40 டன் கரும்பு மகசூல்

இதுகுறித்து சர்க்கரை ஆலை அதிகாரியிடம் விசாரித்தபோது அவர் கூறியாதாவது:-

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 4 லட்சத்து 30 ஆயிரத்து 10 டன் கரும்புகளை அரவை செய்யும் திறன் வாய்ந்ததாகும். தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்புகள் அரவை செய்யப்படுகிறது.

சர்க்கரை ஆலை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் அரவை நிறுத்தப்பட்டு ஆலை தற்காலிகமாக மூடப்படும். பராமரிப்பு முடிந்தவுடன் திறக்கப்பட்டு டிசம்பர் மாதம் ஆலையில் அரவை தொடங்கும்.

கரும்பு பயிர்களை முறையாக பராமரித்தால் ஒரு ஏக்கருக்கு 40 டன் கரும்பு வரை மகசூல் எடுக்கலாம். ஆனால் இவர் முறையாக பராமரிப்பு செய்யாததால் கரும்புகள் திரட்சியின்றி ஒரு ஏக்கருக்கு 12 டன் வீதம்தான் மகசூல் கிடைக்கும் நிலை இருந்தது.

நாங்கள் சம்பந்தப்பட்ட விவசாயி சக்கரபாணியை 2 தினங்களுக்கு முன்பு கூட நேரில் சென்று சந்தித்து ஆலையில் அரவை தொடங்க உள்ள டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் கரும்புக்கு 'கட்டிங் ஆர்டர்' (அறுவடைக்கு அனுமதி) கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம்.

ஆனால் கரும்பு பயிர்களை அவர் அழித்து விட்டதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அது குறித்து விசாரிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story