தேவூர் அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
தேவூர் அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தேவூர்:
கிணற்றில் பிணம்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கைக்கோளப்பாளையம் பகுதியில் விவசாய கிணற்றில் நேற்று காலையில் ஆண் பிணம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் தேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.
கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தண்ணீர் பாய்ச்ச சென்றவர்
விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர், சேலம் மாவட்டம் தேவூர் அருகே கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் (வயது 49) என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி (45) என்ற மனைவியும், சினேகா (21), கனிஷ்கா (17) ஆகிய 2 மகள்களும், கவின் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான தோட்டம் கைக்கோளப்பாளையம் பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ரமேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவர் காயம் அடைந்து இறந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ரமேஷ் இறப்பு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.