ஆண்டிமடம் அருகே குட்டையில் மூழ்கி விவசாயி பலி
ஆண்டிமடம் அருகே குட்டையில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆண் பிணம்
அரியலூர் மாவட்டம் விளந்தை கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரை அருகே சிலர் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிறிய குட்டையில் மொபட் ஒன்று தண்ணீரில் மூழ்கி கிடந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விவசாயி
விசாரணையில் குட்டையில் இறந்து கிடந்தவர் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த தாவீது ராஜா (வயது 54), விவசாயி என்பது தெரிய வந்தது. இவர் ஆண்டிமடம் அருகே உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்திற்கு மொபட்டில் சென்று விட்டு காடுவெட்டி- ஆண்டிமடம் சாலை விளந்தை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரிக்கரை அருகே உள்ள குட்டையில் நிலைத்தடுமாறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.